மதுரை-போடி அகல பாதை ரயில்வே திட்டத்தை புறக்கணித்த அரசு
பதிவு செய்த நேரம்:2015-02-13 10:30:00
மதுரை, : மத்திய ரயில்வே அமைச்சருக்கு தமிழக முதல்வர் வழங்கிய கோரிக்கை கடிதத்தில் மதுரை-போடி அகல ரயில்பாதை திட்டத்தை சேர்க்க வில்லை. இதனால் தென் மாவட்ட மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மதுரை-போடிநாயக்கனூர் இடையே ரயில் சேவை கடந்த 1928ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி துவங்கப்பட்டது. கடந்த 2009-2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில், மதுரை-போடிநாயக்கனூர் இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதையை அகற்றி விட்டு ரூ.150 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய அகல ரயில் பாதை திட்டத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. மீட்டர்கேஜ் பாதைகளை முழுமையாக அகற்றிய நிலையில், அகல பாதை பணிகள் துவங்க வில்லை.
இதற்கு...
more... வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏலக்காய் மற்றும் டீ எஸ்டேட்டுகள் நிறைந்த பகுதியாக போடிநாயக்கனூர் உள்ளது. தற்போது இங்கு உற்பத்தியாகும் பலவித விளைபொருட்கள் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்படுகிறது.இந்த நிலையில் பாஜ அரசு 2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மதுரை-போடி இடையிலான அகல ரயில்பாதை திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை குறித்து எந்த இடத்திலும் வலியுறுத்த வில்லை.
தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் போடிநாயக்கனூர்-கோட்டயம் இடையே மட்டுமே புதிய பாதை தேவை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை-போடிநாயக்கனூர் இடையே அகல ரயில்பாதை தேவை என்று குறிப்பிட்டு கேட்கவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் அழுத்தம் கொடுக்கவில்லை. இப்படி தமிழக முதல்வர் ஏமாற்றி விட்டாரே என்று அதிருப்தியில் இருப்பதாக தென் மாவட்ட மக்கள் சிலர் கூறினர். ஆளும் அதிமுக அரசு, மதுரை-போடி இடையே அகல ரயில்பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வற்புறுத்தாமல், புறக்கணித்திருப்பதாக தேனி மாவட்ட மக்களும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். அப்பகுதிக்கு ஓபிஎஸ் நுழைந்தால் கருப்பு கொடி காட்டுவோம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவை ஒருபுறம் இருக்க, மதுரை, கம்பம், குமுளி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு சுமார் ரூ240 கோடி அளவில் வேளாண் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பிற சரக்கு பொருட்கள் சாலை போக்குவரத்து மார்க்கம் மூலமாக அனுப்பப்பட்டு கையாளப்படுகின்றன. மதுரை-போடி இடையே அகல ரயில் பாதைத்திட்டம் நிறைவேற்றினால் பயணிகள் போக்குவரத்து மூலமாக மட்டுமே சுமார் ரூ.700 கோடி வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதுதவிர தேவாரத்தில் 1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அகல ரயில் பாதைத்திட்டம் நிறைவேற்றினால் நியூட்ரினோ மையத்திற்கு வருபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் இம்மையத்திற்கு கருவிகள் ரயில் மார்க்கமாக பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு கூறியதாவது; மத்திய ரயில்வே அமைச்சரிடம் வர்த்தக சங்கம் சார்பில் கோரிக்கை மனு வைத்திருக்கிறோம். அதில், சென்னை-கன்னியாகுமரி வரை இரு வழித்தடத்திற்கான பணிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும். திண்டுக்கல் வழியாக போடிக்கு ரயில் பாதை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் பெரியகுளத்திற்கு ரயில் சேவை கிடைக்கும். இப்பகுதிகளில் உள்ள மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மேம்பாடு அடையும். முதல்வர் ஓபிஎஸ், போடி-கோட்டயத்திற்கு புதிய ரயில் பாதை கேட்டுள்ளார். மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை ஏற்படுத்தாமல் போடி-கோட்டயத்திற்கு புதிய பாதை ஏற்படுத்தி ஒரு பிரயோஜனமும் இருக்காது. இதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.